டெல்லியில் மீண்டும் வன்முறை; ராணுவத்தை இறக்க திட்டம்?

செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (14:52 IST)
நேற்று டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்த நிலையில் இன்று மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒரு அணியினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதில் ஒருவரையொருவர் மூர்க்கமாக தாக்கி கொண்டதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கலவரத்தில் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் அப்பகுதியே போர் நடந்த பகுதி போல காட்சியளித்தது. இதனால் டெல்லியின் முக்கியமான பகுதிகள் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள பஜன்புரா அருகே இரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து நடந்து வரும் கலவரத்தை அடக்க ராணுவத்தை கொண்டு வரவும் தயங்க மாட்டோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் அமைதி நிலையை கொண்டு வருவது குறித்து கெஜ்ரிவாலும், அமித்ஷாவும் கலந்து பேசியுள்ள நிலையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்