டெல்லியில் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று செய்தி வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கடுமையான போட்டியில் ஈடுபட்டன. மூன்று கட்சிகளும் மாறி மாறி வாக்குறுதிகளை அறிவித்து தீவிரமாக பிரச்சாரம் செய்தன.
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் வெளியான கருத்துக்கணிப்புகளில், கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜக கூட்டணியே வெற்றி பெறும் எனக் கூறியுள்ளன.
மொத்தம் 70 சட்டமன்ற தொகுதிகளில், 40 முதல் 45 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி கைப்பற்றும் எனவும், ஆம் ஆத்மி கட்சி 22 முதல் 30 தொகுதிகள் வரை வெல்லும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில், காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், அந்த கூட்டணி அதிகபட்சமாக மூன்று தொகுதிகள் மட்டுமே வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.