பிரிந்து வாழும் மனைவிக்கு கணவரின் ஓய்வூதியத்தில் உரிமை உண்டா? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Mahendran

சனி, 27 செப்டம்பர் 2025 (10:08 IST)
பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கு, உயிரிழந்த அரசு ஊழியரின் ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதிய பலன்கள் அனைத்துக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
கணவர் உயிரிழப்பதற்கு முன் விவாகரத்து வழக்கு தொடுத்திருந்தாலும், அவரது குடும்பத்திற்கு இந்த உரிமை உண்டு என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
 
நீதியரசர்கள் மணீஷ் பிதாலே மற்றும் ஒய்.ஜி.கோபர்கடே ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரிந்து வாழ்ந்த மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் மனுவை விசாரித்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
 
1997-ல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினருக்கு, 2009-ல் கணவர் அரசு மருத்துவ கல்லூரி உதவிப் பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார். ஆனால், 2011-ல் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டது. கணவர் மனைவிக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த சண்டைகளுக்கு மத்தியில், அந்தப் பேராசிரியர் தனது ஓய்வூதிய பலன்களுக்கான நியமனதாரர்கள் குறித்த விவரங்களை மாற்றினார். தனது மனைவிக்கு பதிலாக, தனது சகோதரரை நியமனதாரராக மாற்றிய அவர், தனது இரண்டு மகன்களின் பெயரை மட்டும் அதில் தக்க வைத்துக் கொண்டார்.
 
இந்த நிலையில் 2018-ல் கணவர் உயிரிழந்த பிறகு, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஓய்வூதியப் பலன்களுக்காக விண்ணப்பித்தனர்.  இந்த வழக்கில் பிரிந்து வாழ்ந்த மனைவி மற்றும் அவரது குழந்தைகளின் வழக்கறிஞர் யசோதீப் தேஷ்முக், ஒரு அரசு ஊழியருக்கு குடும்பம் இருந்தால், அந்த குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரையும் நியமனதாரராக நியமிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
 
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் மகாராஷ்டிரா அரசு உடனடியாக எட்டு வாரங்களுக்குள் நிலுவையில் உள்ள அனைத்து ஓய்வூதிய மனைவி மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கு பலன்களை விடுவிக்க வேண்டும் என்றும், தாமதம் ஏற்பட்டால், அதற்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மாதாந்திர குடும்ப ஓய்வூதியத்தையும் உடனடியாக தொடங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்