இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக, புதுடெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் அமீர் கான் முத்தகி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெண் பத்திரிகையாளர்கள் அவரது செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைக்கு மத்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், "அந்தச் செய்தியாளர் சந்திப்பு முற்றிலும் ஆப்கானிஸ்தான் தூதரக வளாகத்திற்குள் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருபுறம் இந்தியாவின் பாரம்பரியத்தையும் அழகையும் பிரதிபலிக்கும் தாஜ்மஹாலை காண வருவதும், மறுபுறம் இந்திய மண்ணில் பெண்களின் உரிமைகளை மீறும் ஒரு செயலில் ஈடுபடுவதும் முரண்பாடாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.