மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சியான காங்கிரஸும் தங்கள் பங்குக்கு பல இடங்களில் போராட்டம் நடத்தியது. தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் பலர் குடியுரிமை சட்டம் குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். பாஜக தலைவர்கள் பலரும் காங்கிரஸை பல மேடைகளில் நேரடியாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் நேற்று குடியரசு தினத்தன்று காங்கிரஸ் கட்சி அமேசான் தளத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆங்கில பதிப்பை பிரதமர் மோடியின் பெயரில் ஆர்டர் செய்துள்ளது. அந்த ஸ்க்ரீன்ஷாட்டை தனது ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் “இந்திய அரசியலமைப்பு புத்தகம் விரைவில் உங்களை வந்தடையும். நாட்டை பிளவுபடுத்துவதை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு அதை படிக்கவும்” என பதிவிட்டுள்ளனர். பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் முறையில் அனுப்பப்பட்ட அந்த புத்தகத்தை பிரதமர் அலுவலகம் திரும்ப அனுப்பியுள்ளது.