ஒடிஷாவில் நேற்று முன்தினம் இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ர்யில்களும் விபத்தில் சிக்கியது. இதில், 288 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்து வெளிநாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பஹானாகா பஜார் ரயில் நிலையம் பகுதியில் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது. இரவு முழுவதும் 140 டன் திறன் கொண்ட கனரக க்ரேன்கள், 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக உருகுலைந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த விபத்து காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.