நிலக்கரி ஸ்டாக் இருக்கு.. கரண்ட் பிரச்சினை வராது! – நிலக்கரி அமைச்சகம் விளக்கம்!
திங்கள், 11 அக்டோபர் 2021 (09:27 IST)
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து நிலக்கரி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மின்சாரம் தயாரிக்க அனல்மின்நிலையங்களையே நம்பி இருந்து வருகிறது. இந்த அனல்மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க நிலக்கரியே முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நிலக்கரிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரிக்கு பதிலாக தேவையான அளவு காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிலக்கரி அமைச்சகம் “மின் உற்பத்தி நிலையங்களில் தேவையான அளவு நிலக்கரி கையிருப்பில் உள்ளது. மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது” என கூறியுள்ளது.