கூட்டம் கூடுவதை தவிர்க்க மதுபானங்கள் டோர் டெலிவரி: அரசின் அதிரடி அறிவிப்பு

புதன், 6 மே 2020 (09:24 IST)
மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை செய்ததை அடுத்து நாட்டின் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மதுக்கடைகள் அனைத்திலும் சமூக விலகல் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டு, மாஸ்குகளை மறந்து பொதுமக்கள் மது பாட்டில்களை வாங்கி வருவதால் இதன் விளைவுகள் இன்னும் சில நாட்களில் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது
 
இந்த நிலையில் மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வீடுகளுக்கே சென்று மதுபானங்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை சத்தீஷ்கர் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.
பெரும்பாலான மதுக்கடைகளில் தனிமனித இடைவெளியின்றி மதுப்பிரியர்கள் மதுவை வாங்க முண்டியடித்து வரும் நிலையில் சத்தீஸ்கர் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனா பாதிப்பு இல்லாத மண்டல பகுதிகளில் மட்டும் ஆன்லைனில் மதுவகைகளை ஆர்டர் செய்து அதற்குரிய பணத்தை ஆன்லைனில் கட்டிவிட்டால், மதுபானங்கள் வீட்டிற்கே கொண்டு கொடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும், டெலிவரி கட்டணம் 120 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சத்தீஷ்கர் மாநிலத்தின் இந்த திட்டத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது. ஆனால் இதெல்லாம் ஆயிரக்கணக்கில் மது வாங்குபவர்களுக்குத்தான் சரியாகும் என்றும் குவார்ட்டரும் கட்டிங்கும் வாங்குபவர்களுக்கு சரிப்பட்டு வராது என்றும் கூறப்படுவதால் சத்தீஷ்கரிலும் சமூக விலகல் காற்றில் பறக்கவிட வாய்ப்பு அதிகம் என்று கூறப்ப்டுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்