இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்ததால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு 20 லட்சம் கோடி அளவிலான மேம்பாட்டு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 பகுதிகளாக 5 நாட்கள் அறிவித்தார். ஆனால் மத்திய அரசின் இந்த திட்டங்களால் பெரிய பயன் எதுவும் இல்லை என பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசியுள்ள தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் ”மத்திய அரசு அறிவித்துள்ள சுயசார்பு பொருளாதார திட்டம் உண்மையான மோசடி திட்டம். வெறும் நம்பர்களை கூறி மாநில அரசுகளை ஏமாற்றுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் சர்வதேச நாளிதழ்களில் நகைப்புக்குரிய செய்தியாக உள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் ”மாநிலங்கள் நிதிப்பொறுப்பு மேலாண்மையில் 2 சதவீதம் கூடுதலாக கடன்பெற மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த தொகையை மாநில அரசுகள்தான் செலுத்த போகின்றன. நாங்கள் உங்களிடம் பணம் கேட்டால் எங்களை பிச்சைக்காரர்களை போல நடத்துகிறீர்கள். மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.