நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த மாத இறுதியில் ஆண்டு வருமான வரி, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டியது குறித்து வர்த்தகர்கள், வியாபாரிகள் கால நீட்டிப்பு கோரினர்.
இந்நிலையில் தற்போது செய்தியாளர் சந்திப்பு நடத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி 2019-2020 ம் ஆண்டிற்கான வருமான வரி இந்த மாத இறுதியில் செலுத்தப்பட வேண்டிய நிலையில் கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் கார்ட் – ஆதார் கார்டு இணைப்புக்கான கடைசி தேதியாக மார்ச் 31 அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் கால அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியை பொறுத்தவரை மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரியையும் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 5 கோடிக்கு குறைவான வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு தாமத கட்டணம், வட்டி விகிதம் உள்ளிட்ட எதுவும் விதிக்கப்படாது. 5 கோடிக்கு மேல் வருவாய் பெறும் பெரு நிறுவனங்களுக்கு வட்டி வீதம் 12% த்திலிருந்து 9% ஆக குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.