சியாச்சென் மலை உச்சியில் சிங்கப்பெண்! கேப்டன் ஷிவா சௌகானுக்கு வாழ்த்து மழை!

புதன், 4 ஜனவரி 2023 (10:12 IST)
இந்தியாவின் மிக உயரமான எல்லை பாதுகாப்பு பகுதியான சியாச்செனில் முதல்முறையாக பெண் ஒருவர் ராணுவ கேப்டனாக பதவியேற்றுள்ளார்.

உலகிலேயே மிகவும் உயரத்தில் அமைந்துள்ள போர் பகுதியாகவும், ராணுவ பாதுகாப்பு கண்காணிப்பு பகுதியுமாக உள்ளது சியாச்சென் மலைப்பகுதி. கடல் மட்டத்திலிருந்து சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கடும்பனி நிறைந்த இந்த பகுதி 1984ல் ஆபரேஷன் மேக்தூத் மூலமாக பாகிஸ்தானிடம் இருந்து வென்று இந்தியாவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மைனஸ் டிகிரி குளிர்நிலை கொண்ட இந்த ராணுவ கண்காணிப்பு கேம்ப்பிற்கு முதன்முதலாக ஒரு பெண் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உதய்பூரை சேர்ந்த ஷிவா சௌகான் சிறுவயதிலிருந்தே இந்திய ராணுவம் மீது ஈடுபாடு கொண்டவர். தனது 11 வயதில் தந்தையை இழந்த ஷிவாவை அவரது தாயார்தான் படிக்க வைத்துள்ளார்.



உதய்பூரில் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த ஷிவா சௌகான் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். சியாச்சென் மலைஉச்சியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு சியாச்சென் பயிற்சி பள்ளியில் மலையேற்றம், பனி சறுக்குதல் உள்ளிட்ட பல்வேறு கடினமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த அத்தனை பயிற்சிகளிலும் விடாமுயற்சியால் வென்று காட்டிய ஷிவா சௌகான் தற்போது கண்காணிப்பு குழுவின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது குழு 3 மாதங்கள் அங்கு தங்கி பணியில் ஈடுபட உள்ளனர்.

ALSO READ: 2023 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்!

இந்திய ராணுவத்திலேயே முதன்முறையாக சியாச்சென் மலை உச்சியில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஷிவா சௌகானுக்கு அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்