பீகாரின் பாகல்பூரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜகவினர் அதிகப்படியான இடங்களைப் பெறுவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். பாஜகவினர் 150 இடங்களுக்கு மேல் பெற மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இண்டியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று ராகுல் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு இரண்டு வகையான தியாகிகள் தேவையில்லை, அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் ஜிஎஸ்டி முறையை மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்குவோம் என்று அவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு இரண்டு உத்தரவாதங்களை அளிக்கிறோம் என தெரிவித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப் போகிறது என்றும் இரண்டாவதாக, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கப் போகிறோம் என்றும் உறுதி அளித்தார்.