அயோத்தியில் ராமர் கோவில்: ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு!!
சனி, 9 நவம்பர் 2019 (11:26 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
பாபர் மசூதி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு 3 தரப்பு உரிமை கோரியது. சன்னு வபு வாரியம், நிர்மோஹி அஹாரா , ராம் லல்லா அமைப்புகள் அலஹாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இம்மூன்று அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இடத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாமென அளித்த நீதிமன்றத்தி இந்த தீர்பை எதிர்த்து மூன்று அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த வழக்கை முடிக்க மூன்று பேர் கொண்ட சமரச குழு அமைக்கப்பட்டும் தீர்வுகள் எட்டப்படவில்லை.
இதனையடுத்து , இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூறப்பட்டு வருவதாவது, சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது. அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை நம்புகின்றனர்.
சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களில் அங்கு இந்து கோயில் இருந்தது என உச்சநீதிமன்றமே கூறினாலும் அதை மட்டுமே வைத்து முடிவெடுத்துவிட முடியாது.
அதேபோல கடந்த 2010 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் அயோத்தி நிலத்தை மூன்றாக பிரித்து கொடுத்தது தவறு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அயோத்தி நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் உச்சநீதிமன்றம் ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளது.