பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை – ஆந்திர அரசு அதிரடி

செவ்வாய், 10 டிசம்பர் 2019 (14:42 IST)
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க சட்ட திருத்தம் செய்ய இருக்கிறது ஆந்திர அரசு என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்து கொண்டிருந்த நிலையில் கைதிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது தெலுங்கானா போலீஸ். தெலுங்கானா காவல்துறையின் இந்த என்கவுண்டரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டியிருந்தனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதை பாராட்டியுள்ளதோடு ஆந்திராவில் இதுபோன்ற பாலியல் கொடுமைகளை தடுக்கவும் புதிய சட்டம் இயற்ற உள்ளார். அதன்படி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களை ஒரு வாரத்தில் விசாரிக்கவும், இரண்டு வாரத்தில் தூக்கிலிடவும் சட்டம் இயற்றப்பட உள்ளது என கூறப்ப்டுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ஜெகன் மோகன் ரெட்டி ”நிர்பயா பெயரில் சட்டம் கொண்டு வந்தாலும் நிர்பயாவை கொன்றவர்கள் இன்றும் நிம்மதியாகதான் இருக்கிறார்கள். இதனால் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றம் செய்பவர்களை உடனுக்குடன் தண்டிக்க வேண்டியது அவசியம்” என கூறியுள்ளனர்.

ஆந்திர அரசு விரைவில் நிறைவேற்றப் போகும் இந்த புதிய சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்துள்ள நிலையில், சில மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்