ஹெலிகாப்டர் பேர ஊழல் - சோனியா, மன்மோகன் மீதான வழக்கை ஏற்றது நீதிமன்றம்
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (12:32 IST)
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் பேர விவ காரம் தொடர்பாக, சோனியா காந்தி, மன்மோகன் சிங் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக இத்தாலியைச் சேர்ந்த பின் மெக்கனிக்கா குழுமத்தின் ஹெலிகாப்டர் பிரிவான அகஸ்டா, வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க 2010 பிப்ரவரியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ரூ. 3 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசியல் தலைவர்கள், கடற்படை அதிகாரிகளுக்கு இத்தாலி நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக, இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவ்விவகாரத்தை இத்தாலி மிலன் நீதிமன்றமும், இந்தியாவிலும் சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தன. மிலன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முன்னாள் நிர்வாக அதிகாரி புரூனோ ஸ்பக்னோ லினிக்கு 4 ஆண்டுகளும், பின் மெக்கனிக்கா நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி கியூசெப் ஓர்ஸிக்கு நான்கரை ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பின் 93, 204-ஆவது பக்கங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளதாக பாஜக-வினர் குற்றம்சாட்டினர். சோனியா காந்தி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரிடம்தான் பேரம் நடந்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் பானுமதி மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழனன்று இந்த மனுவை ஏற்று, விசாரணைப் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டது. இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.