வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல! - உச்சநீதிமன்ற தீர்ப்பு!

Prasanth Karthick

வெள்ளி, 25 அக்டோபர் 2024 (10:26 IST)

பிறந்த தேதிக்கான சான்று ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது.

 

 

இந்தியா முழுவதும் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை பல்வேறு சேவைகளுக்கும் சான்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை, ஒருவரின் வயதுக்கு சான்றாக பயன்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியுள்ளது.

 

ஹரியானாவில் கடந்த 2015ல் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி அவரது குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். பள்ளி சான்றிதழ் அடிப்படையில் இறந்தவர் வயது 45 என கணக்கிட்ட தீர்ப்பாயம் ரூ.19,35,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

 

இதை எதிர்த்து காப்பீடு நிறுவனம் பஞ்சாப் - அரியான ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஆதார் அட்டையின்படி அவரது வயது 47 என்பதால் இழப்பீடு தொகையை ரூ.9,22,000 ஆக குறைக்கப்பட்டது.

 

இதை எதிர்த்து இறந்தவரின் குடும்பத்தார் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் பிறந்த தேதிக்கான முறையான ஆவணம் பள்ளி சான்றிதழா? ஆதார் அட்டையா? என்ற கேள்வி எழுந்தது.

 

இதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆதார் அட்டை வழங்கும் ஆணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆதார் அட்டையை அடையாள உறுதிபடுத்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பிறந்த தேதிக்கு அது முறையான ஆவணம் அல்ல” என தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, பள்ளி சான்றிதழ் அடிப்படையில் இறந்தவருக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்