மானத்த வாங்கிட்டியேடி: கர்ப்பிணிப் பெண் கொடூர கொலை; தொடரும் அவலங்கள்

வியாழன், 22 நவம்பர் 2018 (13:54 IST)
வேற்று ஜாதிப் பையனை திருமணம் செய்ததால் பெற்றோர் கர்ப்பிணியாக இருந்த தங்களது பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
நாட்டில் தற்பொழுது சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உடுமலைப்பேட்டை சங்கர்- கவுசல்யா, தருமபுரி இளவரசன்-திவ்யா, திருச்செங்கோடு கோகுல்ராஜ், தெலிங்கானாவில் பிரணய் - அம்ருதா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
 
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சாதிமாற்றுத் திருமணம் செய்த நந்தீஷ் - சுவாதி படுகொலை செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு எல்லாம் அடங்குவதற்குள்ளேயே கர்நாடகாவில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த முத்துராஜ் என்ற வாலிபரும் ஜோதி என்ற பெண்ணும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஜோதியின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனால் சில மாதங்களுக்கு முன்னர் ஜோதி வீட்டை விட்டு வெளியேறி முத்துராஜை திருமணம் செய்துகொண்டார். ஜோதி கர்ப்பமாக இருந்தார்.
 
இந்நிலையில் நேற்று முத்துராஜ் வெளியே சென்றிருந்த நேரத்தில் அவர் வீட்டிற்கு நுழைந்த ஜோதியின் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஆகியோர் ஜோதியை வலுக்கட்டாயமாக காரில் தூக்கிச் சென்றனர். காரில் ஜோதியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு அவரது உடலை கால்வாயில் வீசிச் சென்றனர்.
 
இதையடுத்து ஜோதியின் உடலை மீட்ட போலீஸார் இந்த கொடூர செயலை செய்த அவரின் பெற்றோர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்