நிலாவுல மாட்டிக்கிட்டேன் காப்பாத்துங்க சார்! – கதறிய நபருக்கு மும்பை போலீஸ் கொடுத்த பதில்!

வியாழன், 2 பிப்ரவரி 2023 (12:45 IST)
தான் நிலாவில் மாட்டிக் கொண்டதாக உதவி கேட்ட நபருக்கு மும்பை போலீஸ் அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சமூக வலைதள பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில் சீரியஸான சில பதிவுகள் கூட காமெடியாக முடிந்து விடுவதும் நடக்கிறது. இப்போதெல்லாம் அரசு துறைகள் முதற்கொண்டு அனைத்து புகார் மற்றும் நடவடிக்கைகளும் சமூக வலைதளங்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சாலையில் மழைநீர் தேங்குகிறதா? புகைப்படத்துடன் ஒரு ட்வீட் போதும். உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சரிசெய்யப்பட்ட புகைப்படத்துடன் பதில் வருகிறது. இப்போதெல்லாம் மழை பெய்தால் பள்ளி விடுமுறை உண்டா? இல்லையா? என நேரடியாக மாவட்ட ஆட்சியரிடமே கேட்கும் அளவிற்கு சமூக வலைதளங்கள் பல சேவைகளை எளிதாக்கியுள்ளன.



மும்பை போலீஸாரும் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளதுடன், ட்விட்டர் வழியாக அளிக்கப்படும் புகார்களுக்கும் உரிய கவனம் அளித்து வருகின்றனர். சமீபத்தில் மும்பை போலீஸார் “உங்கள் வாழ்க்கையில் மிகவும் அவசரமான உதவி தேவைபட்டால் தயங்காமல் 100 எண்ணை அழையுங்கள்” என பதிவிட்டிருந்தனர்.

அதற்கு ரிப்ளை செய்திருந்த நபர் ஒருவர் நிலவில் ஒரு விண்வெளி வீரர் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு ”நான் இங்கு மாட்டிக் கொண்டேன்” என பதிவிட்டுள்ளார். ஆனால் அதை நகைச்சுவையாக அணுகிய போலீஸார் பதிலுக்கு “அந்த பகுதி எங்கள் காவல் எல்லைக்குள் வராது. எனினும் நாங்கள் நிலவுக்கு வந்து உங்களை அழைத்து செல்வோம் என நீங்கள் நம்பியதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என கூறியுள்ளனர்.

அதை தொடர்ந்து பலரும் நகைச்சுவையாக சில கருத்துகளை தெரிவித்ததில் அந்த பதிவே கலகலப்பாகியுள்ளதுடன் வைரலும் ஆகியுள்ளது.

This one is really not under our jurisdiction.
But we are glad that you trust us to the moon and back. :) https://t.co/MLfDlpbCd8

— मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) January 30, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்