பிரதமர் மோடி நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்திய ரூபாய் நோட்டுகளில் உயர் மதிப்புக் கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை இழக்கச்செய்யும் முடிவை ஒரே நாள் இரவில் அறிவித்தார். இதனால் நாட்டில் உள்ள 120 கோடி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தங்கள் கைகளில் உள்ள பணத்தை வங்கிகளில் செலுத்த முடியாமல் தொல்லைகளை அனுபவித்தனர்.
இந்த அதிரடி நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படைந்தது. சில்லறை வணிகங்கள் பாதிக்குப் பாதி அழியும் சூழ்நிலை உருவானது. அதுமட்டுமல்லாமல் இந்த நடவடிக்கையினால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இத்தனை இழப்புகளுக்குப் பிறகும் கருப்புப் பணம் ஒழிந்த பாடில்லை. நாட்டில் புழக்கத்தில் இருந்த 99 சதவீதம் பணம் மீண்டும் திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு மாபெரும் தோல்வி என பொருளாதார வல்லுனர்களால் கூறப்படுகிறது. இப்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், பணமதிப்பிழப்பின் போது புதிய 10,20,50,100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆன செலவுக் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் பேசியுள்ளார். புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 8000 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.