உத்தரபிரதேசம் மாநிலத்தில் சுமார் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்ட நிலையில், இதில் போலி திருமணம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டில் அரசு அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்குள்ள பாலியா மாவட்டத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி அரசு சார்பில் இலவச திருமணங்கள் நட்த்தி வைக்கப்பட்டன. இதில், சுமார் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், இது உண்மையான கணக்கில்லை என்றும், போலி கணக்கு எழுதுவதற்காக, பலர் மணமகன் மற்றும் மணமகளாக நடிக்க அழைத்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இலவச திருமணங்களுக்காக ஜோடி ஒன்றுக்கு 51 ஆயிரம் வழங்கப்படும் நிலையில், ரூ. 35 ஆயிரம் பணமாகவும், மீதி 16 ஆயிரம் ரூபாயில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் திருமண பொருட்களுக்கும், ரூ.6 ஆயிரம் திருமண நிகழ்ச்சிக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.