காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடிப்படையில் காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் கடந்த ஏப்ரல் 4-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான 3.6 டிஎம்சி தண்ணீரை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்குரியது) கர்நாடகா உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழ்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் கர்நாடகா அதிகாரிகளோ, தங்கள் மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்று தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனையும் கர்நாடகா அரசு ஏற்க மறுத்து தண்ணீரை திறந்துவிடவில்லை.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மண்டியா மாவட்டங்களில் மழை வெளுக்கிறது. இதனையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கர்நாடகா அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.