'2ஜி: சில குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டுமே சிபிஐ குறிவைக்கிறது'

திங்கள், 1 ஆகஸ்ட் 2011 (20:09 IST)
2ஜி ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சில குறிப்பிட்ட நிறுவனங்களையே குறிவைப்பதாக இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாகித் பால்வா கூறியுள்ளார்.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கடந்த வாரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, பிரதமர் மற்றும் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரிந்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் அவற்றின் பங்குகள் விற்பனை நடைபெற்றதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், 2ஜி வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றபோது, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவரான சாகித் பால்வா ஆஜரானார்.

அப்போது, சிபிஐ குறிப்பிட்ட சில நிறுவனங்களை மட்டுமே இந்த வழக்கில் தொடர்புபடுத்தி விசாரித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், 2ஜி ஒதுக்கீட்டில் இழப்பு எதுவுமில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங்கும், இந்த துறைக்கு பொறுப்பேற்றிருக்கிற அமைச்சர் கபில் சிபலும் கூறியுள்ள நிலையில், நான் எப்படி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்க முடியும் என்று அவர் கேள்வி விடுத்தார்.

இந்த முறையை பின்பற்றாமல், வேறு முறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் அரசுக்கு இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்காது என்றெல்லாம் அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வேறு முறைகள் என்று எதுவுமே இல்லாத போது அல்லது அடையாளம் காட்டப்படாதபோது இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பால்வா தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் மஜீத் மேமன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்