மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு - அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு! புத்தாண்டு முதல் அமல்

புதன், 1 ஜனவரி 2014 (10:07 IST)
FILE
டெல்லியில், மின்கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படுவதாக மந்திரிசபை கூட்டத்துக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, மின்கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும் என்றும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதால், அவற்றின் கணக்குகள் தணிக்கை செய்யப்படும் என்றும் ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்து இருந்தார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, டெல்லி மந்திரிசபை கூட்டத்தை நேற்று தனது வீட்டில் நடத்தினார்.

அதில், மின்கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

200 யூனிட்வரை பயன்படுத்துபவர்கள், 200 யூனிட்டில் இருந்து 400 யூனிட்வரை பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு மின்கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படுகிறது.

இதனால், டெல்லியில் 28 லட்சம் பேர் பலன் அடைவார்கள். இந்த கட்டண குறைப்பு, 1-ந்தேதி (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. 50 சதவீத மின்கட்டணத்தை டெல்லி அரசு மானியமாக வழங்கும். இதனால் 3 மாதங்களுக்கு ரூ.61 கோடி செலவாகும். 3 மாதங்களுக்கு பிறகு இந்த மானியத்தை நீட்டிப்பது பற்றி, தணிக்கை அறிக்கை வெளியான பிறகு முடிவு செய்யப்படும்.

மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி சசிகாந்த் சர்மாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களின் கணக்குகளை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை கொண்டு தணிக்கை செய்ய டெல்லி அரசு விரும்புகிறது. அதற்கு முன்பு, விதிமுறைப்படி, அந்த நிறுவனங்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (இன்று) காலைக்குள் அவை பதில் அளிக்க வேண்டும்.

புதன்கிழமை மாலை டெல்லி மந்திரிசபை கூட்டம் நடைபெறும். அதில், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்வது பற்றி முடிவு எடுக்கப்படும். தணிக்கை செய்ய முடிவு எடுக்கப்பட்டால், அதுபற்றி கவர்னர் பெயரில் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

புதன்கிழமை, சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் இடைக்கால சபாநாயகர் பதவியை பா.ஜனதாவுக்கு அளிக்க முன்வந்தோம். ஆனால் பா.ஜனதா அதை ஏற்க மறுத்து விட்டது. எனவே, காங்கிரசைச் சேர்ந்த மதீன் அகமது, இடைக்கால சபாநாயகராக இருப்பார்.

சபாநாயகர் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளராக எம்.எஸ்.திர் போட்டியிடுவார்.

ஓரிரு நாளில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பேன். அப்போது ஆட்சி நீடிக்குமா? இல்லையா? என்பது தெரியாது. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

இருப்பினும், அதற்கு முன்பு இருக்கும் 48 மணி நேரத்தில் எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ, அவ்வளவு நன்மை செய்வேன். 2 நாட்கள் கழித்து நான் குணமாகி விடலாம். ஆனால், இப்போது கிடைக்கும் 48 மணி நேரம் அப்போது கிடைக்குமா என்று தெரியாது.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இதற்கிடையே, டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:-

அரவிந்த் கெஜ்ரிவால் குணமடைந்து வருகிறார். அவர் புதன்கிழமை அலுவலகத்துக்கு செல்வார். சட்டசபை கூட்டத்தொடரிலும் கலந்து கொள்வார் என்று நம்புகிறேன். என்றார்.


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் விபின் மிட்டல் கூறியதாவது:-

கெஜ்ரிவாலின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது. அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். இருப்பினும், அவர் 2 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். டெல்லிக்கு வெளியே பயணம் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்