பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: மக்களவை 15 நிமிடங்கள் தள்ளிவைப்பு

வியாழன், 2 ஜூலை 2009 (12:23 IST)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதலாவது பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 15 நிமிடங்கள் தள்ளிவைக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், முதன் முறையாக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முந்தையை மக்களவையில் இருந்ததை விட இம்முறை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலம் குறைந்ததால் இடையூறுகள், அமளிகள் பெருமளவில் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலையுயர்வு தொடர்பான விவாதத்தின் போது, மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 15 நிமிடங்கள் மக்களவை நடவடிக்கைகளை தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

இதன் பின்னர் மீண்டும் அவை துவங்கியுள்ள நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையுயர்வு மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்