பணிக்கொடை திருத்த மசோதா நிறைவேறியது

வெள்ளி, 18 டிசம்பர் 2009 (18:54 IST)
நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் ஆசிரியர்கள் பயனடையும் வகையில் பணிக்கொடை திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.

பணிக்கொடை பெறக்கூடிய ஊழியர்களின் வரையறையை மேலும் விரிவுபடுத்தும் வகையிலான இந்த மசோதா கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் கடந்த 1972ஆம் ஆண்டு பணிக்கொடை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி தனியார் நிறுவனங்களில் ஆசிரியர்களாகப் பணிபுரிவோரும் கடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு பணிக்கொடை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தொடர்பான விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஹரிஷ் ராவத், இந்த மசோதா நிறைவேறியிருப்பதன் மூலம் 60 லட்சம் ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்றார்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் கூறினார்.

தற்போது பணிக்கொடை அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று இருப்பதை உயர்த்த வகை செய்யும் புதிய திருத்தம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்