நோவர்டிஸ் நிறுவனத்திற்கு புற்றுநோய் மருந்து காப்பீட்டு உரிமம் ரத்து

திங்கள், 1 ஏப்ரல் 2013 (15:26 IST)
FILE
நோவர்டிஸ் நிறுவனத்திற்கு மீண்டும் உரிமம் வழங்கினால் புற்றுநோய் மருத்துவம் விலையுயர்ந்ததாகிவிடும் என்று கூறி சுவிட்ஸர்லாந்தின் நோவர்டிஸ் நிறுவனத்திற்கு புற்றுநோய் மருந்து காப்பீட்டு உரிமத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவர்டிஸ், தன்னுடைய மேம்படுத்தப்பட்ட தயாரிப்பான கிளிவெக் என்ற புற்றுநோய்க்கான மருந்தின் காப்புரிமையை புதுப்பிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது, நோவர்டிஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். நோவர்டிஸ் நிறுவனத்தின் புற்றுநோய் மருந்துகள் அதிக விலை கொண்டவையாக இருக்கின்றன. இம்மருந்துகளை உபயோகப்படுத்த மாதத்திற்கு 2600 அமெரிக்க டாலர் செலவழிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் இந்தியத் தயாரிப்பில், மாதம் 175 டாலர் மதிப்பிலேயே இந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. எனவே நோவர்டிஸ் தயாரிப்பு உரிமத்தைப் புதுப்பித்தால் புற்றுநோய் மருத்துவம் என்பது விலையுயர்ந்த ஒன்றாகிவிடும் என்று வாதிடப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டில் இந்த மருந்துக்கான காப்புரிமையை புதுப்பிக்க நோவர்டிஸ் முயற்சி செய்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

மீண்டும் தற்போது எடுத்த முயற்சியும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், சாதாரண மக்கள் குறைந்த விலையில் புற்றுநோய் மருத்துவத்தினைத் தொடர்ந்து பெற முடியும் என்றும், புற்றுநோயாளிகளின் உதவி நிறுவனத்தை நடத்திவரும் ஆனந்த் க்ரோவர் என்ற வழக்கறிஞர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்