தாக்குதல் அச்சுறுத்தல்: மும்பையில் விமானம் அவசரமாக தரையிறககம்

ஞாயிறு, 7 பிப்ரவரி 2010 (15:05 IST)
மும்பையிலிருந்து இன்று புறப்பட்டுச் சென்ற எமிரேடு விமானத்தில், தீவிரவாதி ஒருவன் இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மும்பை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 9.59 மணியளவில் துபாய் செல்லும் எமிரேடு விமானம் புறப்பட்டுச் சென்றது.

விமான பைலட் மற்றும் சிப்பந்திகள் உள்பட மொத்தம் 356 பேருடன் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே, அந்த விமானத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தீவிரவாதி ஒருவன் பயணிப்பதாக மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

இதனையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கிருந்து கிடைத்த உத்தரவைத் தொடர்ந்து அந்த விமானத்தை, விமானி ஓட்டி அந்த விமானத்தை 10.47 மணியளவில் மீண்டும் அவசரமாக தரையிறக்கினார்.

இதனையடுத்து அதிலிருந்து பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு, சோதனையிடப்பட்டனர்.அவர்களது உடமைகளும் சோதனையிடப்பட்டன.

இதில் இரண்டு பயணிகள் மீது மட்டும் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப்பு ஏஜென்சியினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்