தலித் பெண்ணை நிர்வாணமாக்கிய 8 பேருக்கு 18 ஆண்டுகள் சிறை

Ilavarasan

ஞாயிறு, 27 ஏப்ரல் 2014 (17:22 IST)
உத்தரபிரதேசத்தில் ஒரு தலித் பெண்ணை நிர்வாணமாக்கி மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற 8 பேருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் தவுனாப்பூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு சாதாரண பிரச்சனைக்காக ஒரு தலித் இன பெண் நிர்வாணமாக்கப்பட்டு மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.
 
இச்சம்பவம் கடந்த 1994–ம் ஆண்டு அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது இது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது முதலமைச்சராக இருந்த முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராம் உள்பட பல தலைவர்கள் இந்த கிராமத்துக்கு நேரில் வந்தனர்.
 
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் கூறினர். அவரது மகனுக்கு அரசு வேலையும், உதவி தொகையும் வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
 
அதை தொடர்ந்து இந்த இழிவு செயலில் ஈடுபட்ட அஜயப்லால், ராஜ்நாத், சாலிக், கதக், ராம்கோபால், தீனாநாத், கந்தா, லர்க் உர் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
அவர்கள் மீது அலகாபாத்தில் உள்ள சிறப்பு எஸ்.சி.மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாக இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டது. இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் இறந்து விட்டனர்.
 
இந்த நிலையில் நேற்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், அஜய்ப் லால்,. ராஜ்நாத், சாலிக் உள்பட 8 பேருக்கு தலா 18 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக் கப்பட்டது. இத்தொகையில் பாதியை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதற்டையே மீதமுள்ள 11 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. எனவே, அவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்