டெல்லியில் 8 மாதங்களில் மட்டும் 1,121 கற்பழிப்புகள் - நல்லதுதான் என்கின்றனர் போலீசார்

FILE
தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு துவங்கிய முதல் 8 மாதங்களில் மட்டும் 1,121 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13 ஆண்டுகளிலேயே இப்போதுதான் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நீடிக்கிறது. குறிப்பாக கடந்த 8 மாதங்களில் மட்டும் ஆயிரத்து 1,121 பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஏறுமுகத்தில் இருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த ஆண்டு 13 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இது ஒரு நல்ல அறிகுறி என தெரிவித்துள்ள போலீசார்...

பாதிக்கப்பட்ட பெண்கள், நீதி வேண்டி துணிவுடன் காவல்நிலையத்தை தேடி வருவதையே இந்த குற்றப்பதிவு அறிக்கை காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.

டிசம்பர் 16ம் தேதி நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பின்னர் அதிக அளவில் பாலியல் குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். டெல்லி போலீசாரால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 80 சதவீத குற்றவாளிகள் கைது செய்யப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

2010 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 507 குற்ற வழக்குகளும், 2011 ஆம் ஆண்டு 572 குற்றவழக்குகளும் பதிவாகியுள்ள நிலையில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு 468 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்