சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர் பணிநீக்கம்

வியாழன், 2 ஜூலை 2009 (17:54 IST)
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் நோக்கி தனது ஷூ-வை வீசிய சீக்கிய நிருபரை அவர் பணியாற்றும் நிறுவனம் இன்று பணி நீக்கம் செய்துள்ளது.

ஹிந்தி நாளிதழில் கடந்த 10 ஆண்டுகளாக நிருபராக இருந்தவர் ஜர்னைல் சிங்.

சீக்கியர்களுக்கு எதிரான கடந்த 1984ஆம் ஆண்டு கலவரத்தில், தொடர்புடையதாக கூறப்படும் ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று சிபிஐ தெரிவித்ததைத் தொடர்ந்து, அதுபற்றிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் அளித்த பதில் திருப்தி அளிக்காததால், ஜர்னைல் சிங் தனது ஷூ-வை விசிறியடித்தார். என்றாலும் அந்த ஷூ, சிதம்பரத்தின் மீது படவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த 4 மாதங்களுக்கு முன் ஜர்னைல் சிங் பணியாற்றும் பத்திரிகை நிறுவனம் அவருக்கு நோட்டீஸ் அளித்தது.

இன்று அந்த நிறுவனத்தில் இருந்து ஜர்னைல் சிங் நீக்கப்பட்டுள்ளார். இதுபற்றிக் கருத்துக் கூறிய அவர், தனது சேவை இந்த நோட்டீஸ் மூலம் முடிவுக்கு வந்துள்ளது என்றும், நியாயமான பிரச்சினையை எழுப்பியதற்காக தான் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜர்னைல் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை அந்த பத்திரிகை நிறுவனமும் உறுதி செய்தது.

ஜர்னைல் சிங் வீசிய ஷூ ஏற்படுத்திய சர்ச்சையால், மக்களவைத் தேர்தலில் டைட்லருக்கும், சஜ்ஜன் குமாருக்கும் வாய்ப்பு அளிக்க திட்டமிட்டிருந்த காங்கிரஸ் கட்சி இறுதியில் அந்த முடிவைக் கைவிட்டது.

அவர்கள் இருவரும் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்