கூடங்குளம் மின்சாரம் கிடைக்காவிட்டால் தமிழகம் பாதிக்கப்படும்: ஜெ.வுக்கு பிரதமர் எச்சரிக்கை

புதன், 12 அக்டோபர் 2011 (18:06 IST)
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின் மூலம் பெறக்கூடிய மின்சாரம் கிடைக்காமல் போனால் தமிழக வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும் என்று ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்துக்கு ஆதரவு தருமாறு கோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,கூடங்குளம் அணு உலை திட்டத்தின் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 ஆகியவை மூலம் பெறப்படும் 2000 மெகாவாட் மின்சாரத்தில்,தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றும், ஒருவேளை இந்த அணு உலை திட்டம் நிறைவேறாமல் போனால் அதன்காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தொழில் திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடங்குளம் மக்களின் பாதுகாப்புக்கும்,வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அணுமின் நிலையத்தில் எந்தப் பணிகளும் நடைபெறாது என அவர் அதில் உறுதி அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்