குடிகாரர்களுக்கு கம்பத்தில் கட்டிவைத்து அடி: ஹசாரேவுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

செவ்வாய், 22 நவம்பர் 2011 (16:25 IST)
குடிகாரர்களை தங்களது ஊரில் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக காந்தியவாதி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அன்னா ஹசாரே கூறியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஹசாரேவின் சொந்த ஊர் மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள ராலேகான் சித்தி ஆகும்.

அந்த ஊர் தலைவர் போன்று செயல்பட்டு வந்த ஹசாரே,ஏழைகளின் உணவாக கருதப்படும் மாட்டிறைச்சியை உண்பவர்களை கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக ஒரு குற்றச்சாட்டு ஏற்கனவே உண்டு.

இந்நிலையில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு நேற்று பேட்டியளித்த ஹசாரே, தங்களது சொந்த கிராமத்தில் குடிகாரர்களை கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக கூறியிருந்தார்.

"குடிகாரர்களை நாங்கள் மூன்று முறை எச்சரிப்போம். ஆனால் அந்த எச்சரிக்கைக்கு பின்னரும் குடிக்கும் நபரை வீட்டிலிருந்து இழுத்து வந்து கோவில் முன்னர் நிறுத்தி இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்வோம்.

அதற்கு பின்னரும் அந்த நபர் குடித்தால் அவரை கோவில் அருகில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடிப்போம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இவ்வாறு வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டவர் தன்னை காந்தியவாதி என்று எவ்வாறு அழைத்துக்கொள்ளலாம் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளதோடு, குடிகாரர்களை கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளன.

ஹசாரேவை கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி,"தாலிபான்களும் இதையேதான் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

"குடிகாரர்களை திருத்துவதற்கான வழி இதுவல்ல" என்று பா.ஜனதாவும் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்