எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு கட்டாயமானது

திங்கள், 3 ஜனவரி 2011 (20:22 IST)
எம்.பி.பி.எஸ். மருத்துவ பட்டப் படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி அகில இந்திய மருத்துவக் கவுன்சில் இன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

2011 - 12 ஆம் கல்வி ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்தே மருத்துவக் கவுன்சில் மேற்கூறிய அறிவிக்கையை இன்று வெளியிட்டது.

இதன்படி இனிமேல் மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்றும், அதற்கு அவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு நுழைவு தேர்வில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற வேண்டும்.அதே சமயம் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40 விழுக்காடும்,மாற்றுத் திறனாளிகள் 45 விழுக்காடு மதிப்பெண்களும் பெற வேண்டும்.

குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற தவறும் மாணவர்கள் வரவிருக்கும் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு என்பது அதில் தெரிவிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்