இமயமலையில் நிலநடுக்கம் ஏற்படும் - கேதார்நாத், பத்ரிநாத்தில் அதிக பாதிப்பு ஏற்படும்

வியாழன், 18 ஜூலை 2013 (17:34 IST)
FILE
இமயமலையின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தேசிய புவியியல்சார் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வறிக்கையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாவோன் - கர்வால் பகுதியில் ஏற்படும் நில அதிர்வினை பதிவு செய்து ஆராய்ந்ததன் மூலம் இமாலய பகுதியில் உள்ள பல பகுதிகளில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் இது குறித்து கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், 2008ஆம் ஆண்டு ஜூன் வரை ஒரு ஆய்வு நடத்தியது. இதன் அறிக்கைகள் கடந்த 2010 ஆண்டு அளிக்கப்பட்டது.

இப்போதுள்ள மக்கள் நெருக்கத்திற்கும், புதிய கட்டுமானங்கள், அணைகள் போன்றவற்றின் பெருக்கத்திற்கும் இடையில் நில அதிர்வு ஏற்பட்டால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என புவியியல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 90 சதவீத நில அதிர்வு கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் வட மேற்கு இமாலய பகுதிகளில் ஏற்படும் என புவியியல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்