எமன் - திரைவிமர்சனம்

சனி, 25 பிப்ரவரி 2017 (15:25 IST)
விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் இசையில், ஜீவா சங்கர் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில், மியா ஜார்க் கதாநயகியாகவும் தியாகராஜன், சில்பா மஞ்சுநாத், சங்கிலி முருகன், சார்லி சுவாமிநாதன் ஆகியோர் நடிப்பில் இப்படம் வெளியாகியுள்ளது. 


 
 
திருநெல்வேலியில் அரசியல் ஆர்வமுள்ள அறிவுடை நம்பி, கலப்பு திருமணத்தின் காரணமாக வஞ்சனை செய்து கொல்லப்பட, அவர் மனைவி மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறார். பிறந்த உடனே பெற்றோரை இழந்ததால், எமன் என்ற பெயருடன் அழைக்கப்படும் தமிழரசன் வளர்ந்து பெரியவனாகிப் பழிவாங்கும் அரசியல் கதைதான் எமன் திரைப்படம்.
 
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த விஜய் ஆண்டனி தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட தான் செய்யாத  குற்றத்திற்கு பொறுப்பேற்று ஜெயிலுக்கு செல்கிறார். 
 
சிறையில் மாரிமுத்துவின் அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் தனது எதிரியான ஜெயக்குமாருடன் இணையும் மாரிமுத்து, விஜய் ஆண்டனியை கொல்லவதற்கான சதியில் உடன்படுகிறார். அதேநேரத்தில் தனது தம்பியை கொன்ற மாரிமுத்து, ஜெயக்குமாரை பழிவாங்க முன்னாள் எம்.எல்.ஏ.வான தியாகராஜன், விஜய் ஆண்டனியை பயன்படுத்துகிறார்.
 
பின்னர் விஜய் ஆண்டனியை வைத்தே அவர்கள் இருவரையும் தீர்த்துகட்டுகிறார் தியாகராஜன். இந்நிலையில், விஜய் ஆண்டனியின் தந்தையை கொன்ற ஆளுங்கட்சி அமைச்சர் விஜய் ஆண்டனியையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். 
 
இதனிடையே விஜய் ஆண்டனியின் தோழியான மியா ஜார்ஜுக்கு  அமைச்சரின் மகன் தொல்லை கொடுக்கிறார். இவை அனைத்திலும் இருந்து தப்பிக்க விஜய் ஆண்டனி கையில் எடுக்கும் ஆயுதம் அரசியல்.
 
அரசியலில் நுழைந்த பின்னர் விஜய் ஆண்டனி தனது பிரச்சனைகளை சரிசெய்து கொண்டாரா? அரசியலில் வெற்றி பெற்றாரா என்பது மீதிகதை.
 
அரசியல்வாதியாக வரும் விஜய் ஆண்டனி அந்த வேடத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்தாலும் காதல் காட்சிகளில் சொதப்பி இருக்கிறார். 
 
மியா ஜார்ஜுக்கு பெரிய அளவில் நடிப்பு இல்லை என்றாலும், அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. அரசியல்வாதியாக வரும் தியாகராஜன் காட்சிக்கு தேவையானவற்றை சிறப்பாக கொடுத்துள்ளார். 
 
அரசியலில் புதுமையை கொண்டுவர முயற்சி செய்திருக்கும் இயக்குனர் ஜுவா சங்கர், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
 
படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய விஜய் ஆண்டனி பாடல்களை கோட்டைவிட்டிருக்கிறார். மேலும் சார்லி, சங்கிலி முருகன், லொள்ளு சபா சுவாமிநாதன், மாரிமுத்து ஆகியோரும் கதைக்கு ஏற்ப தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்