திருநாள் - திரைவிமர்சனம்

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (16:27 IST)
ஜீவா, நயந்தாரா நடிப்பில் திருநாள் திரைப்படம் இன்று வெளியானது. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இந்த திரைப்படத்தை இன்று திரையிட்டுள்ளனர். இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பி.எஸ்.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம்.செந்தில் குமார் தயாரித்துள்ளார்.


 
 
கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படம் காதலில் விழும் இருவரின் கதையை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகனாக இருக்கும் ஜீவா உள்ளூர் ரவுடியாக இருக்கிறார். இவர் தன்னை தாக்க வருபவர்களை வாயில் உள்ள பிளேடை துப்பி தாக்குவதில் சிறந்து விளங்குகிறார்.
 
ரவுடியாக இருக்கும் ஜீவா, குடும்ப பாங்கான பொண்ணாக வரும் நயன்தாராவை காதலிக்கிறார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். நயன்தாரா மீது காதலில் விழும் ஜீவா தனது பிளேடு போட்டு துப்பும் பழக்கங்கள், ரவுடீசம் போன்றவற்றை விட்டு குற்றச்செயல்கள் நல்ல வாழ்க்கையை தராது என்பதை உணர்கிறார்.
 
படத்தின் மொத்த கதையும் இவர்கள் இருவருக்கும் இடையே ஆக்‌ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என சுற்றி சுற்றி வருகிறது. நயன்தாரா, ஜீவா இடையே நல்ல ஜோடி பொருத்தம் உள்ளது. நல்ல கதை, முன்னணி நடிகர்களின் திறமையான நடிப்பு, இயக்கம், படத்தின் மூலம் சொல்ல வந்த கருத்து, ஜீவாவின் கதாபாத்திரம் போன்றவை இந்த படத்துக்கு பலமாக உள்ளது.
 
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், விஜயன், ஜேயின் படத்தொகுப்பும் படத்தில் முழுமையாக நம்மை பயணிக்க வைக்கிறது.
 
படத்தில் நகைச்சுவைக்கு இடம் வைக்காமல் இருந்தது படத்தின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஜீவா, நயன்தாராவின் கெமிஸ்ட்ரி நன்றாகவே இருக்கிறது, இதற்காகவே படத்தை இன்னொருமுறை பார்க்கலாம்.
 
மொத்தத்தில் திருநாள் ‘திகட்டாத நாள்’.
 
ரேட்டிங்: 3/5
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்