சுட்டுப்பிடிக்க உத்தரவு: திரைவிமர்சனம்

வெள்ளி, 14 ஜூன் 2019 (12:47 IST)
ஜீவா, சிபிராஜ் நடித்த 'போக்கிரி ராஜா' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் அடுத்த படம் தான் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'. இந்த உத்தரவு ரசிகர்களை சென்றடையுமா? என்பதை பார்ப்போம்
 
விக்ராந்த் தனது வாய்பேச முடியாத, காது கேட்காத மகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாததால், குழந்தையை காப்பாற்ற நண்பர்கள் சுசீந்திரன் மற்றும் இருவருடன் இணைந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்கின்றார். இந்த கொள்ளையை முடித்து விட்டு கிளம்பும்போது போலீஸ் துரத்துகிறது. போலீசாரிடம் இருந்து தப்பிக்கும்போது ஒரு ஸ்லம் ஏரியாவில் கொள்ளையர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகிறது இதனையடுத்து அந்த ஸ்லம் ஏரியாவை ரவுண்டப் செய்யும் போலீஸ், அங்கு ஒளிந்திருக்கும் கொள்ளையர்களை பிடித்தார்களா? கொள்ளையர்களால் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
 
இந்த படத்தின் உண்மையான ஹீரோ மிஷ்கின் தான். போலீஸ் கேரக்டருக்கு உரிய நடை, உடை பாவனை மற்றும் மிடுக்கு ஆகியவை மிகச்சரியாக உள்ளது. அடுத்ததாக சுசீந்திரனின் நடிப்பு. இவ்வளவு அருமையாக நடிக்கும் இவர் ஏன் முழுநேர நடிகராக மாறக்கூடாது? என்று தோன்றுகிறது.
 
விக்ராந்த் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் என மாறி மாறி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டிலும் தேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகி அதுல்யா ரவி ஒரு திடீர் மீடியா கேர்ள் ஆக மாறி தனது கேரக்டரை மெருகேற்றியுள்ளார். துறுதுறுவென இவர் இருப்பது அவருடைய கேரக்டரை பளிச்சிட வைக்கின்றது.
 
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை அருமை. ஒரு ஆக்சன் படத்திற்கு தேவையான சரியான பின்னணி இசையை அளித்துள்ளார். சுஜித் சராங் ஒளிப்பதிவு மற்றும் ராமராவ் படத்தொகுப்பு இரண்டுமே கனகச்சிதம்
 
இந்த படத்தின் முதல் பாதியும், இரண்டாம் பாதியின் ஒரு அரை மணி நேர காட்சிகளும் சுத்தமாக லாஜிக்கே இல்லாமல் படு சொதப்பலாக இருப்பது போல் தெரியும். ஆனால் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா கடைசி இருபது நிமிடங்களில் அவிழ்த்துவிடும் டுவிஸ்டுகள் படத்தை மொத்தமாக தூக்கி நிறுத்திவிடுகிறது. ஏன் வேண்டுமென்றே லாஜிக் ஓட்டைகளை விட்டோம் என்பதற்கு கிளைமாக்ஸில் சரியான விளக்கம் அளிக்கின்றார் இயக்குனர். விக்ராந்த், சுசீந்திரன் ஆகிய இருவருமே உண்மையில் யார்? மிஷ்கினின் உண்மையான ஆபரேசன் என்ன? என்பதெல்லாம் யாரும் ஊகிக்க முடியாத வேற லெவல் காட்சிகள்.
 
மொத்தத்தில் சூப்பரான கிளைமாக்ஸ் காட்சிகளுடன் கூடிய ஒரு அருமையான த்ரில் படம் தான் இந்த 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'
 
3/5

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்