கடவுள் இருக்கான் குமாரு - திரைவிமர்சனம்

சனி, 19 நவம்பர் 2016 (10:44 IST)
நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகை நிக்கி கல்ராணி, ஆனந்தி நடிப்பில், இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், சக்தி சரவணன் ஒளிப்பதிவில், ஆர்.ஜே,பாலாஜி, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் கூட்டணியில், நாயகனே இசை அமைத்து வெளிவந்திருக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு.


 
 
காதலித்த பெண்ணுக்காக மதம் மாற பிடிக்காமல் மனம் மாறும் இளைஞரின் கதை தான் கடவுள் இருக்கான் குமாரு.
 
ஜி.வி.பிரகாஷுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமணம். திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் முன்னால் காதலி ஆனந்தியை மறக்க பேச்சுலர் பார்ட்டிக்காக பாண்டிச்சேரி வரை பயணம் மெற்கொள்கிறார்கள்.
 
பாண்டிச்சேரியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் வழியில், போலீஸ் அதிகாரிகளான பிரகாஷ் ராஜ், சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோர் இவர்களது காரை வழிமறித்து சோதனை செய்கிறார்கள்.
 
காரில் மதுபாட்டில்கள் இருப்பதை பார்த்ததும், கைது செய்யப்போவதாக பிரகாஷ் ராஜ் மிரட்டுகிறார். உடனே பயந்துபோன ஜி.வி.யும், பாலாஜியும் அவர்களிடம் இருந்து தப்பித்து செல்கிறார்கள். ஆனால், பாலாஜியின் மொபைல் சிங்கம் புலியிடம் சிக்குகிறது. அதைவைத்து பிரகாஷ் ராஜ் அவர்களை பின்தொடருகிறார்.
 
இதற்கிடையில், ஜி.வி.யின் முன்னாள் காதலியான ஆனந்தியும், திருமணம் செய்து கொள்ளப்போகும் நிக்கி கல்ராணியும் அவருக்கு தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கிறார்கள். 
 
ஆனந்தி பாசமாகவும், நிக்கி கல்ராணி கண்டிஷனாகவும் நடந்து கொள்கிறார். ஒருகட்டத்தில் ஜி.வி.பிரகாஷின் மனதில் சிறிய மாற்றம் ஏற்படுகிறது. 
 
அது என்ன மாற்றம்? ஜி.வி-க்கு ஆனந்திக்கும் ஏன் காதல் முறிந்தது? பாலாஜியும், ஜி.வி-யும் பிரகாஷ் ராஜிடம் இருந்து தப்பித்தார்களா? ஜி.வி. யாரை திருமணம் செய்தார்? என்ற கேள்விக்கெள்ளாம் விடை தருவதே படத்தின் மீதி கதை.
 
ஜி.வி.பிரகாஷ் வழக்கம்போல் நண்பர்களோடு அரட்டையடிப்பது, நாயகிகளுடன் இணைந்து டூயட் ஆடுவது என தனது பணியை செய்திருக்கிறார். நீண்ட வசனங்களைக்கூட அசால்ட்டாக பேசி அசர வைக்கிறார். 
 
படத்திற்கு படம் ஆனந்தி மெருகேறிக் கொண்டே வருகிறார். நிக்கி கல்ராணியும் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். 
 
ஆர்.ஜே.பாலாஜி, ராஜேஷ் படத்தில் சந்தானம் இல்லாத குறையை நீக்கியிருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் கரவொலி.
 
படத்திற்கு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். காமெடி கலந்த வில்லத்தனத்தில் கலக்கியிருக்கிறார். அவருக்கு ரோபோ சங்கரும், சிங்கம் புலியும் கைகொடுத்து உதவியிருக்கிறார்கள். பேசுவதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தும் ஊர்வசியும், அந்த நிகழ்ச்சியை நடத்தும் இயக்குனராக வரும் மனோபாலாவும் நகைச்சுவையில் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்கள்.
 
இயக்குனர் எம்.ராஜேஷ் வழக்கம்போல காமெடி கலந்த ஒரு படத்தையே கொடுத்திருக்கிறார். முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் படத்தை ரசிக்கும்படி எடுத்திருப்பது சிறப்பு. 
 
முதல்பாதி கலகலப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் பாடல் காட்சிகளை புகுத்தி சற்று சலிப்பை தருகிறது. அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
 
சக்தி சரவணனின் ஒளிப்பதிவு காட்சிகளை மிகவும் அழகாக படம் பிடித்திருக்கிறது. 
 
மொத்தத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ போரும் இல்ல ஜோரும் இல்ல.....

 

வெப்துனியாவைப் படிக்கவும்