ஓடு ராஜா ஓடு: திரைவிமர்சனம்

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (17:16 IST)
கட்டப்பஞ்சாயத்து முதல் கொலை வரை செய்து சென்னையின் ஒரு பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் நாசரும் அவருடைய தம்பியும். இவர்களுடைய தந்தை சாருஹாசன், இறக்கும்போது இந்த தொழிலை விட்டுவிட்டு நிம்மதியாக வாழுங்கள் என்று சத்தியம் வாங்கி கொள்கிறார். தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தொழிலை விட்டுவிட முடிவு செய்கிறார் நாசர். ஆனால் அவருடைய தம்பியோ, தொழிலை விட மறுக்கின்றார். இந்த நிலையில் நாசரை கொலை செய்ய ஒரு கும்பலும், கடத்தி பணம் பறிக்க ஒரு கும்பலும் கிளம்புகிறது. ஆனால் நாசரை எதிர்பாராத வகையில் ஹீரோ சோமசுந்தரும் அவருடைய நண்பரும் காப்பாற்றுகின்றனர். இதில் நடக்கும் குழப்பங்கள், ஆள்மாறாட்டங்கள்,  சொதப்பல்கள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை
 
மனைவியின் வற்புறுத்தலால் செட்டாப் பாக்ஸ் வாங்க செல்லும் ஹீரோ சோமசுந்தரம், நண்பனால் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வதையும் அதனால் ஏற்படும் கஷ்டங்களையும் வெகுஅழகான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸில் மனைவியுடன் வேறொருவரை தகாத முறையில் பார்த்தபோதும், கோபப்படாமல் தன் மனைவி மீது நம்பிக்கை வைத்து அவர் பேசும் வசனம் ஒன்று போதும் அவருடைய நடிப்பை பாராட்ட....
 
லட்சுமி குறும்படம் மூலம் அனைவருக்கும் அறிமுகமான லட்சுமி பிரியாவுக்கு இந்த படத்திலும் கிட்டத்தட்ட அதே சாயலான கேரக்டர். வெகு இயல்பான நடிப்பால் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கின்றார். தன்னிடம் தவறான நோக்கத்துடன் பழகும் இளைஞனுக்கு சாட்டையடி வசனத்தால் பதிலடி கொடுக்கின்றார். கிளைமாக்ஸ் காட்சியிலும் இவரது நடிப்பு சூப்பர்
 
மேலும் இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து புதுமுகங்களின் நடிப்பும் சூப்பர். அனைவரது கேரக்டர்களும் படத்திற்கு உயிர் நாடி. குறிப்பாக சோமசுந்தரம் நண்பராக நடித்தவர் அனைவரின் கவனத்தை பெறுகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் மயக்கத்தில் இருந்தாலும் நாசரின் நடிப்பு நிறைவாக உள்ளது.
 
தோஷ் நந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளது மட்டுமின்றி பின்னணி இசையும் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவுகிறது.  
 
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் டார்க் காமெடி திரைக்கதைதான். காமெடி ஆங்காங்கே சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகாவிட்டாலும் கதை சொன்ன விதம் புதுமையாக இருந்தது. மூன்று  வெவ்வேறு சம்பவங்களை ஒரே புள்ளியில் இணைக்கும் புத்திசாலித்தனத்திற்காகவே இயக்குனரை மனதார பாராட்டலாம். படத்தின் பல காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு இருப்பதே படத்தின் சிறப்பு அம்சம்.
 
ஒரே மாதிரியான திரைக்கதை உள்ள படங்களை பார்த்து புளித்து போன ரசிகர்களுக்கு இதுமாதிரி புதுமையான திரைக்கதை உள்ள படங்கள் நிச்சயம் கவரும். 
 
ரேட்டிங்: 3.5/5

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்