'கனா' திரைவிமர்சனம்

வெள்ளி, 21 டிசம்பர் 2018 (07:58 IST)
விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழை பெண், பெண்கள் கிரிக்கெட் உலகில் சாதித்த கதை தான் இந்த 'கனா' திரைப்படம்

விவசாயி சத்யராஜ் ஒரு தீவிர கிரிக்கெட் பிரியர். தெண்டுல்கர் அவுட் ஆனாலும், இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அழுதுவிடுவார். அவ்வாறு ஒருமுறை சத்யராஜ் அழுவதை பார்க்கும் அவரது மகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தந்தையின் அழுகையை சிரிப்பாக மாற்ற, தானே ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக மாற வேண்டும் என்று மனதிற்குள் சபதம் ஏற்கிறார். அந்த சபதம் நிறைவேறியதா? தந்தை சத்யராஜை அவர் சிரிக்க வைத்தாரா? அதற்காக அவர் சந்தித்த பிரச்சனைகள், அனுபவித்த அவமானங்கள் வெற்றி தோல்விகளை கூறுவதுதான் இந்த படத்தின் மீதிக்கதை

இந்த படத்தின் உண்மையான நாயகன் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்தான். முதல் போட்டியிலேயே சிக்ஸர் அடித்து செஞ்சுரி போட்டுள்ளார். ஒரு கிரிக்கெட் படத்தில் விவசாயத்தை புகுத்தியது ஏன்? என்று மனதில் எழும் கேள்விக்கு கிளைமாக்ஸில் அழுத்தமாக விடை கூறுகிறார். இதுவொரு கிரிக்கெட் படம் அல்ல, விவசாய படம், விவசாய படத்தில் தான் கிரிக்கெட் புகுத்தப்பட்டுள்ளது என்பதுதான் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் கூறுவது. ஒரு விவசாயிக்கு ஏற்படும் பிரச்சனைகள், வேதனைகள், கடன் பெற்ற வங்கி அதிகாரிகள் தரும் டார்ச்சர் ஆகியவற்றோடு ஒரு கிரிக்கெட் வீராங்கனை சந்திக்கும் பிரச்சனைகள், சக வீராங்கனைகளால் ஏற்படும் அவமானங்கள், ஆகியவற்றை சரியாக ஒப்பிட்டுள்ளார். ரொமான்ஸ், காமெடி போன்றவைகளை கலக்காமல் ஒரு கமர்ஷியல் சினிமா எடுத்து நண்பர் சிவகார்த்திகேயனுக்கு வெற்றிக்கோப்பையை பெற்று தந்துவிட்டார் என்றே கூற வேண்டும்

இந்த படத்தில் நிஜமாகவே ஒரு கிரிக்கெட் வீராங்கனையை நடிக்க வைத்திருந்தால்கூட இந்த அளவுக்கு இந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்திருப்பாரா? என்பது சந்தேகம்தான். ஒரு கிரிக்கெட் வீராங்கனையகவே ஐஸ்வர்யா ராஜேஷ் மாறி, ஒவ்வொரு பிரேமிலும் கண்ணில் வெறியுடன் நடித்துள்ளார். தன்னை அவமானப்படுத்தியவர்களை அவர் பந்துவீச்சின்மூலம் பதில் கூறும் காட்சிகள் அபாரம். கிரிக்கெட் விளையாட்டை பயிற்சியே பெறாத ஒருவர் விளையாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் கடினமான பயிற்சி பெற்று நிஜ கிரிக்கெட் வீராங்கனையாகவே மாறியுள்ளார்.

ஒரு விவசாயியின் வேதனை என்ன என்பதை தனது அனுபவ நடிப்பின் மூலம் சத்யராஜ் வெளிப்படுத்தியுள்ளார். ஆங்காங்கே தனது வழக்கமான நையாண்டிகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. மகளுக்காக அவர் செய்யும் தியாகம், மனைவியிடம் பரிந்து பேசுவது, விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவத்தை புரிய வைப்பது என சத்யராஜ் நடிப்பில் மெருகு தெரிகிறது.

இடைவேளைக்கு பின் நெல்சன் திலீப்குமார் கேரக்டரில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் வந்த பின்னர் படம் ஜெட் வேகத்தில் பறக்கின்றது. தான் பயிற்சி கொடுக்கும் வீராங்கனைகளே தன்னை அவமதிக்கும்போது பொறுமையாக இருந்துவிட்டு அதன் பின் அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூறும் நடிப்பின்போது சிவகார்த்திகேயன் மிளிர்கிறார். கிளைமாக்ஸில் ஐஸ்வர்யாவுக்கு அவர் கூறும் அறிவுரை வசனத்தின்போது திரையரங்கே கைதட்டலால் அதிர்கிறது. குறிப்பாக 'எது பேசறதா இருந்தாலும் ஜெயிச்சிட்டு பேசு' என்ற வசனம் இன்னும் கொஞ்ச நாளுக்கு டிரெண்டில் இருக்கும்

ஹீரோ தர்ஷனுக்கு அதிக வேலையில்லை என்றாலும் நடிப்பு ஓகே. இளவரசு, ரமா, ஆகியோர்களுக்கு ஒருசில காட்சிகளே இருந்தாலும் மனதில் நிற்கும் வகையில் உள்ளது.

திபு நிபுணன் தாமஸ் இசையில் மூன்று பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளது. குறிப்பாக 'வாயாடி பெத்த புள்ள ' பாடல் படத்தில் அவ்வளவு அழகு. கிளைமாக்ஸ் காட்சி உள்பட படம் முழுவதும் பின்னணி இசையை பின்னி எடுத்துள்ளார்.

தரமான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங், நல்ல மெசேஜ், போரடிக்காத காட்சிகள், ஆகியவைகளால் இந்த 'கனா' படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கின்றோம்

ரேட்டிங்: 4/5

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்