ரஜினியின் காலா: திரைவிமர்சனம்

வியாழன், 7 ஜூன் 2018 (09:23 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ரஞ்சித்தின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் 'காலா'. மிகப்பெரிய எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பு சம அளவில் கலந்து வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை பார்ப்போம்
 
தாராவியின் காவலன் ரஜினி. இவரை மீறி தாராவியில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு. இந்த நிலையில் தாராவியின் மொத்த இடத்தையும் தனது அதிகாரத்தால் பறிக்க நினைக்கின்றார் அதிகாரமிக்க நானா படேகர். இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.
 
ரஜினியின் நடிப்பு குறித்து சொல்லவே தேவையில்லை. காலா கேரக்டரில் பின்னி எடுத்துவிட்டார். குறிப்பாக முதல் பாதியில் மனைவி ஈஸ்வரிராவிடம் கொஞ்சம் காட்சிகள் கலகலப்பு. அதேபோல் முன்னாள் காதலி ஹூமா குரேஷியிடம் தனது நிலையை விளக்கும் காட்சியில் அவரது மெச்சூரிட்டியான நடிப்பு வெளிப்படுகிறது. பிற்பாதியில் ஒரே போராட்டம், புரட்சி, ஆக்சன், இழப்புகள் என்று போவதால் ரஜினியின் இயல்பான நடிப்பு மற்றும் மாஸ் காட்சிகள் மிஸ்ஸிங்.
ஈஸ்வரிராவின் இயல்பான நடிப்பு மனதை தொடுகிறது. ரஜினியை மாமா மாமா என்று கொஞ்சுவதில் தொடங்கி , பிள்ளைகளிடம் புலம்புவது முதல் மிக அருமையான நடிப்பு. ஹூமாவை சக்களத்தி வடிவத்தில் பார்த்தாலும் தனது கணவர் மேல் அவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை தனது நடிப்பில் வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.
 
ஹூமாவின் கேரக்டர் முரண்பாடாகவும், கதையிடன் ஒன்றாமலும் உள்ளது. முன்னாள் காதலியாகவும், திடீரென வில்லியாகவும் பின்னர் புரட்சியாளராகவும் மாறுவதை ஏற்று கொள்ளவில்லை. சமுத்திரக்கனியின் கேரக்டரில் காமெடியும் நக்கல்தனமும் கலந்திருப்பதால் ரசிக்க முடிகிறது. இருந்தாலும் இவரை இன்னும் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம்.
 
ரஜினிக்கு இணையான ஒரு மாஸ் நடிகரான நானா படேகரை இந்த படத்தில் இயக்குனர் வீணடித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். ரஜினியுடன் அவர் மோதும் காட்சிகளில் மாஸ் இல்லை. இதனால் படத்தின் விறுவிறுப்பும் குறைகிறது. 
 
வத்திக்குச்சி' திலீபன், அஞ்சலி பட்டேல், சம்பத்ராஜ், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, ஆகியோர்களுக்கு சின்ன சின்ன கேரக்டர் என்றாலும் கதையுடன் கூடிய கேரக்டர் என்பதால் நடிப்பும் குறிப்பிடும்படியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை படத்தின் போராட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது. 'கண்ணம்மா' பாடல் தவிர மற்ற அனைத்து பாடல்களிலும் புரட்சிதான்.
 
முரளியின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளில் அதிரடியும், தாராவியின் குடிசை பகுதியை காட்டுவதில் அற்புதமும் உள்ளது. குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் 'பாலம்' சண்டைக்காட்சியில் கேமிரா அபாரம். படத்தின் நீளம் 167 நிமிடங்கள் என்பதை எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் நிச்சயம் குறைத்திருக்க வேண்டும். குறிப்பாக இரண்டாம் பாதியின் இடைவிடாத போராட்டக்காட்சிகள் போரடிக்கின்றது.
 
இயக்குனர் ரஞ்சித் ஒரு டாகுமெண்டரி படம் போல 'நிலம் எங்கள் உரிமை' என்ற அவரது சொந்த கருத்தை ரஜினியின் படத்தில் திணித்து உலகிற்கு சொல்வதில் வெற்றி பெற்றுவிட்டார். ரஜினி படத்தில் சொன்னால்தான் இந்த கருத்துக்கள் உலகிற்கு போய் சேரும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் ரஜினியின் படத்தை புரட்சிக்கருத்தை எதிர்பார்த்து யார் வருவார்கள் என்று யோசிக்க தவறிவிட்டார். ரஜினியின் மாஸ் காட்சிகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நானாபடேகர், ரஜினி  மீட்டிங் காட்சியில் ரஜினி அடிவாங்கிவிட்டு பேசாமல் திரும்பி வருவதை எந்த ஒரு ரஜினி ரசிகரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். கிளைமாக்ஸில் கூட ரஜினியின் ஆக்சனை அடக்கி வைத்து அப்படி என்ன கதையை சொல்ல வேண்டும் என்று ரஞ்சித் நினைத்துள்ளார் என்பது கடைசி வரை புரியவில்லை
 
மொதத்தில் 'காலா' ரஜினியின் மாஸ் காட்சிகளை மிஸ் செய்துள்ள ஒரு ரஞ்சித் படம்
 
ரேட்டிங்: 2.5/5
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்