கலையரசன், பிரசன்னா இருவரும் சிறு வயது உயிர் நண்பர்கள். தாய் தந்தை இல்லாத பிரசன்னா, தன்னை போலவே தாயை இழந்த கலையரசன் மீது சிறுவயதில் அனுதாபம் வர, அந்த அனுதாபம் நட்பாக மாறியது. இந்நிலையில் கலையரசன் தன்ஷிகாவையும், பிரசன்னா ஸ்ருஷ்டி டாங்கியையும் காதலிக்கின்றனர். இருவரின் காதலிலும் சிக்கல் வந்தது. இந்த சிக்கல்களில் இருந்து இருவரும் மீண்டார்களா? அல்லது மாண்டார்களா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை
இதுவரை கலையரசன் நடித்த படங்கள் அனைத்திலும் சோடை போனதில்லை என்பது தெரிந்ததே. அதேபோல் இந்த படத்திலும் தனது சிறப்பான நடிப்பை தந்துள்ளார். நண்பனிடம் கோபப்படுதல், காதலி தன்ஷிகாவிடம் கொஞ்சல் மற்றும் கிண்டல், ஆகிய காட்சிகளில் கலையரசன் ஸ்கோர் செய்கிறார்.
பிரசன்னாவுக்கு நல்ல கேரக்டர்தான் என்றாலும் அவருக்கேற்ற கேரக்டர் இல்லை என்பது ஒரு மைனஸ். இந்த கேரக்டருக்கு ஒரு இளம் நடிகர் அலல்து புதுமுக நடிகர்தான் பொருத்தமாக இருந்திருப்பார்.
தன்ஷிகாவுக்கு கபாலி'க்கு பின்னர் குறிப்பிட்டு சொல்லும்படியான படம். கிளைமாக்ஸில் விருது வாங்கும் அளவுக்கு மிக இயல்பாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் திருப்தி தரும் வகையில் அவரது நடிப்பு இருந்தது.
இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாடல்கள். அனைத்து பாடல்கள் அருமை. பின்னணி இசையிலும் ஜஸ்டின் பிரபாகர் வெளுத்து வாங்கியுள்ளார். சங்கரின் கேமிரா மற்றும் செல்வா படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.
இயக்குனர் நாகராஜன் முதல் பாதி திரைக்கதையை கொஞ்சம் மெதுவாகவும், 80கள் காலத்து காட்சிகளுடனும் நகர்த்தியுள்ளார். அதற்கு பதிலாக பின்பாதியில் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து, கிளைமாக்ஸில் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இந்த படத்தின் உயிர்நாடியே கிளைமாக்ஸ்தான். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
மொத்தத்தில் கலையரசன், தன்ஷிகா நடிப்பு மற்றும் பாடல்களுக்காக நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்
ரேட்டிங்: 3/5