எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்: திரைவிமர்சனம்

வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (22:19 IST)
தந்தையை கொலை செய்த குற்றத்துக்காக சிறைக்கு சென்று 15 வருடங்கள் கழித்து திரும்பும் கிஷோர், சிறுவயதில் அனாதையாக விடப்பட்ட தனது அக்கா மகன் விவேக் ராஜ்கோபாலை தேடி வருகிறார். பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு பெண்ணை கடத்தி மிகப்பெரிய தொகையை பெற்று வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று முடிவு செய்கின்றனர்.  
 
இதற்காக அவர்கள் கடத்த தேர்வு செய்யும் பெண் தான் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளான வரலட்சுமி சரத்குமார். திட்டமிட்டபடி வரலட்சுமியை கிஷோரும் அவரது கூட்டாளியும் கடத்த, மகளை காப்பாற்ற அவரது தந்தை ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சத்யராஜிடம் சென்று தனது மகளைக் காப்பாற்றி தரும்படி சொல்கிறார்.
 
சத்யராஜ், காவல்நிலைய அதிகாரிகளின் உதவியுடன் தனது வீட்டில் இருந்தே கடத்தல்காரர்களை பிடிக்க வலைவீசுகிறார். சத்யராஜால் கடத்தல்காரர்களை பிடிக்க முடிந்ததா? வரலட்சுமி என்ன ஆனார்? குறிப்பாக வரலட்சுமியை கடத்த திட்டமிட்டது ஏன் போன்ற கேள்விகளுக்கு விடைதான் இந்த படத்தின் மீதி கதை
 
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு சத்யராஜ் கச்சிதமாக பொருந்தினாலும், அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையில் கேரக்டர் உருவாக்கப்படவில்லை. இந்த படத்தில் சத்யராஜை தேவையான அளவு பயன்படுத்தவில்லை என்பது வருத்தமே
 
கிஷோர் கேரக்டர் கனகச்சிதமாக  வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவரது நடிப்பும் பளிச்சிடுகிறது. அதேபோல் விவேக் ராஜகோபால் கேரக்டருக்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை
 
வரலட்சுமி தனக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளதால் இவரது தரப்பில் எந்த குறையையும் காண முடியவில்லை. யோகிபாபு இருந்தும் காமெடி இல்லாத படம் இது ஒன்றாகத்தான் இருக்கும்.
 
இயக்குனர் சர்ஜுன் ஒரு விறுவிறுப்பாக கடத்தல் கதையில் வரலட்சுமியின் காதல், சத்யராஜின் மகள் செண்டிமெண்ட் என தேவையில்லாத பகுதிகளை இணைத்துள்ளதால் கடத்தல் கதையின் வீரியம் குறைந்துவிட்டதாக தெரிகிறது. அதிலும் கடத்தப்பட்ட இடத்திலேயே டூயட் பாடல் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. மேலும் கடத்தல்காரர்களை பிடிக்க சத்யராஜ் கையாளும் முறையில் எந்தவித புதுமையும் இல்லை. திரைக்கதையில் ஆங்காங்கே திடீர் திருப்பங்கள் இருந்தாலும் அந்த திருப்பங்கள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தவில்லை என்பது திரைக்கதையின் பலவீனத்தை காட்டுகிறது. நீ புத்திசாலி என்றால் நான் முட்டாள் இல்லை என்று உனக்குத் தெரியும், ஒரு முறைதான் தப்பு பண்ணிணேன். மறுபடியும் அந்தத் தப்பைப் பண்ண மாட்டேன், ஜெயில் வாழ்க்கை நிறைய மாத்திருக்கு. அது எல்லாத்தையும் சுக்குநூறா உடைச்சுருச்சு போன்ற வசனங்களில் மட்டும் இயக்குனர் மிளிர்கிறார்.
 
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசை ஓகே ரகம்
 
மொத்தத்தில் விறுவிறுப்பு இல்லாத எச்சரிக்கை
 
ரேட்டிங்: 2/5

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்