மறக்க முடியுமா - இயக்குனர் கெரோல் ரீட் (Carol Reed)
சனி, 31 டிசம்பர் 2016 (18:20 IST)
நேற்று இயக்குனர் கெரோல் ரீட்டின் 110 -வது பிறந்தநாள். 1906 டிசம்பர் 30 -ஆம் தேதி லண்டனில் பிறந்த கெரோல் ரீட், முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் மதிப்புமிக்க இயக்குனராக பார்க்கப்பட்டார்.
கெரோல் ரீட்டின் வாழ்க்கை நடிகராக தொடங்கியது. தனது டீன்ஏஜ் பருவத்தில் த்ரில்லர் கதை எழுத்தாளரான, எட்கர் வாலஸிடம் கெரோல் உதவியாளராகச் சேர்ந்தார். எட்கரின் பாதிப்பு கெரோலை சினிமா த்ரில்லர் கதைகளின் பக்கம் திருப்பியது.
அசிஸ்ட்டெண்ட், டயலாக் ரைட்டர், செகண்ட் யூனிட் டைரக்டர் என்று படிப்படியாக முன்னேறி, 1935 -இல் தனது 29 -வது வயதில் மிட்ஷிப்மென் ஈஸி என்ற தனது முதல் படத்தை கெரோல் இயக்கினார். நகைச்சுவை உள்பட பல ஜானர்களில் படங்கள் இயக்கியிருந்தாலும் கெரோலின் களம் த்ரில்லர். பல அருமையான த்ரில்லர் படங்களை இவர் இயக்கியிருந்தும், ஆல்பிரெட் ஹிட்ச்காக், பிரிட்ஸ் லாங்க. போன்ற மேதைகளின் ஆதிக்கத்தால் இவரது படைப்புகள் அதிகம் கொண்டாடப்படாமல் போனது துரதிர்ஷ்டம்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில், கெரோலின் படங்கள் அதிகம் கவனிக்கப்பட ஆரம்பித்தன. இவர் இயக்கிய ஆவணப்படமான தி ட்ரூ க்ளோரி 1945 -இல் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது. 1950 இல் இவர் இயக்கிய தி பாலன் ஐடல் திரைப்படமும், 1951 -இல் தி தோட் மேன் திரைப்படமும் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், இரண்டு முறையும் விருது கிடைக்கவில்லை. 1969 -இல் ஆலிவர் திரைப்படத்துக்காக கெரோலுக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. அவர் இயக்கிய படங்களில் மிக முக்கிய படமாக ஆலிவர் கருதப்படுகிறது.
கானில் கிரான்ட் பரிசை இவரது தி தர்ட் மேன் திரைப்படம் வென்றது. கானின் தங்கப்பனை விருதுக்கு ஏ கிட் ஃபார் டூ ஃபார்த்திங்ஸ் படம் பரிந்துரைக்கப்பட்டது. இவை தவிர வெனிஸிலும் இவரது படம் விருதை வென்றிருக்கிறது.
கெரோலின் திரைப்படங்களில் எடிட்டிங், கேமரா கோணங்கள், நடிகர்களின் முகபாவங்கள் என அனைத்தும் கச்சிதமாக இருக்கும்.
கெரோல் ரீட் அவரது திறமைக்கும், படைப்பு ஆளுமைக்கும் தக்க கவனிப்பை பெறவில்லை. பயோகிராஃபி, நகைச்சுவை, த்ரில்லர், டிராமா என்று அனைத்து ஜானர்களிலும் சலிக்காமல் படங்கள் எடுத்தவர். 1972 -இல் வெளிவந்த அவரது காமெடிப் படமான தி பப்ளிக் ஐ இன்றும் நம்மை சிரிக்க வைக்கும் வல்லமை கொண்டது. 1976 ஏப்ரல் 25 -ஆம் தேதி கெரோல் மரணமடைந்தார்.
கெரோல் ரீட் இயக்கிய படங்களின் பட்டியல்
1972 The Public Eye
1970 Flap
1968 Oliver!
1965 The Agony and the Ecstasy
1963 The Running Man
1962 Mutiny on the Bounty (some scenes, uncredited)