சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி.) சார்பில் சென்னையிலேயே முதல் முறையாக வரும் டிசம்பர் மாதம் 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது.
WD
இது குறித்து, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக்குழு தலைவர் கே.அனந்தகுமார்ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்மிகப் பணிகளுடன் எண்ணற்ற கல்வி, மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு சமுதாயப்பணிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் இலவச திருமணம் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் 36 ஆயிரம் ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் திருமலை திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநிலப் பகுதிகளிலேயே நடைபெற்று உள்ளன.
சென்னையில் முதல் முறையாக 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இப்போது நடத்தப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதியின் அனுக்கிரகத்துடன் நடைபெறும் இந்த இலவச திருமணம், அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.05 மணியில் இருந்து 10.25 மணிக்குள் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இடத்தில் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட உள்ளது.
மணமகள் கழுத்தில் அணியக்கூடிய தங்க தாலி, மணமக்களுக்கான ஆடைகள் ஆகியவை திருப்பதி ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டதாகும்.
திருமண விழாவில், மணமக்கள் சார்பில் 20 பேர் அனுமதிக்கப்படுவார்கள். திருமணம் முடிந்ததும் மண்டபத்திலேயே பதிவாளர் முன்னிலையில் திருமணத்தை பதிவு செய்வதற்கும், திருமண விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு தம்பதிக்கு ஏறக்குறைய 15 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
திருமணத்துக்குப்பின் திருமண தம்பதியர் உள்பட 6 பேர் திருப்பதி வெங்கடேசப்பெருமாளை தரிசிப்பதற்கான டிக்கெட்டும் வழங்கப்படும்.
முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற அடிப்படையில், சென்னை தியாகராய நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பதிவு நடைபெறுகிறது.
ஏழுமலையான் நடத்தும் திருமணம் ஏழு ஜென்மங்களுக்கு நிலைத்து நிற்கும் திருமண பந்தம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த புனிதமான இலவச கூட்டு திருமண விழாவை சிறப்பாக நடத்திட அனைத்து பக்தர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.