அந்த வகையில், அரியானா மாநிலம் ஜாஜ்ஜர் மாவட்டத்தில் பாகி, கேரி என்ற கிராமங்கள் உள்ளன. கேரி கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் பீர்வால் என்பவர் பாகி கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் வாழ்க்கையில், அவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
இருவரையும் கொலைக் குற்றவாளிகள் போன்று விசாரித்த பிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள்(?) இருவரின் கோத்ரம் பற்றி கேட்டனர். கவிதா பினிவால் கோத்ரம் என்றும் சதிஷ் பீர்வால் கோத்ரம் என்றும் கூறினர். இந்த இரண்டு கோத்ரங்களைச் சேர்ந்தவர்கள் சகோதர உறவு உடையவர்கள் என்பதால் கிராமங்களில் இந்த கோத்ரங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆகையால், சதீஷ் - கவிதா திருமணம் செல்லாது. இந்த திருமணத்தை இந்த பஞ்சாயத்து ரத்து செய்கிறது. இனிமேல் தம்பதியர் இருவரும் அண்ணன், தங்கை உறவுடன் பழக வேண்டும்.
மேலும், கவிதா தன்னுடைய குழந்தையுடன் தந்தை வீட்டுக்கு (பாகி கிராமத்துக்கு) செல்ல வேண்டும். பஞ்சாயத்து உத்தரவை அமல்படுத்த 28 நாட்கள் அவகாசம் தரப்படும். பஞ்சாயத்து உத்தரவை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பஞ்சாயத்தார் எச்சரித்தனர்.
இதேபோல், சதீஷ்ஷின் தந்தை ஆசாத் சிங்குக்கு பஞ்சாயத்து கடுமையான உத்தரவை பிறப்பித்தது. குடும்ப சொத்துகளில் இருந்து மகன் சதீஷை பிரித்து விட வேண்டும். பேரக் குழந்தை பெயரில் வங்கியில் ரூ.3 லட்சம் முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த இந்த கிராமப் பஞ்சாயத்து சுமார் 6 மணி நேரம் நடந்தது. கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பஞ்சாயத்து தீர்ப்பைக் கேட்டனர்.
வெவ்வேறு ஜாதியினர் செய்து கொள்ளும் கலப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் தொடர்பாக இதுபோன்ற கிராம பஞ்சாயத்துக்கள் அவ்வப்போது அதிரடி தீர்ப்புகளை வழங்குவது அரியானா மாநிலத்தில் நடந்தேறும் சாதாரண நிகழ்வாகிவிட்டது.
இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அதனை பாதுகாக்க காவல்துறை, நீதிமன்றம் என தனித்தனியான அமைப்புகள் இயங்கி வரும் சூழ்நிலையில், இதுபோன்ற கிராம பஞ்சாயத்துகள் தங்களுக்கென்று ஒரு சட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்படுவது இதுவரை எந்த சட்டத்தாலும் தடுத்து நிறுத்தப்படவில்லை என்பது மன வேதனையைத் தருகிறது.