இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக இருப்பது திமுக அரசு தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஸ்டாலின் எங்கேயாவது சொல்லி இருக்கிறாரா என்ற கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் விண்ணப்பித்த 90 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது என்றும் அதிமுக ஆட்சியில் தரப்பட்ட முதியோர் உதவித் தொகையை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்திவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதேபோல் தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்றவற்றை திமுக முடக்கிவிட்டதாகவும், அதிமுக ஆட்சியில் ஏழை மக்கள் நிறைந்த பகுதிகளில் துவக்கப்பட்ட 2000 மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடிவிட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
ஏழை மக்களுக்கு பயன்படும் திட்டங்களை யார் நிறுத்தினாலும் தேர்தலில் நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக இருப்பது திமுக அரசு தான் என்றும் இந்த கடன் சுமை அனைத்தும் மக்கள் தலையில் தான் விழும் என்றும் எடப்பாடி தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் கெங்கவல்லியில் ஆயிரம் கோடியில் அமைத்த கால்நடை பூங்காவை திமுக அரசு இன்னும் திறக்கவில்லை என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கால்நடை பூங்காவை இதுவரை திறக்காதது ஏன் என்றும் திமுக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.