தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி ஏற்பட்டுள்ளதால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.
அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், அதிமுக, பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு, அதிமுக மீது அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று கூறினார்.
இவர்கள்தான், பிரதமரை எதிர்ப்பது போல வெளியில் வீர வசனம் பேசி வருகிறார் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக் குடை பிடிக்கிறார் என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடி சென்று பிரதமரை அழைத்து வருகிறார் என்று அவர் கூறினார். பிரதமர் இடத்தில் சரணாகதி அடைந்து விட்டு, வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.