நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், எந்தவித புதிய நலத்திட்டங்களுக்கான அறிவிப்போ, அரசாணைகளோ வெளியிடக் கூடாது என்று தமிழ்நாடு அரசு துறைகளின் செயலாளர்களுக்கு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் புதிய திட்டங்களோ, அறிவிப்புகளோ அடங்கிய அரசாணைகளை வெளியிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், முன் தேதியிட்டு சில அறிவிப்புகள் குறித்த அரசாணைகள் வெளியானதாக புகார் எழுந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவில், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், அரசாணை தொடர்பான பதிவேட்டில் இறுதி விசாரணை வெளியிட்ட பின்னர் ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.