இருக் கட்சிகளையும் இணைக்க பாஜக எவ்வளவோ முயன்றும் அது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இருக் கட்சிகளில் உள்ள அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் அவ்வப்போது தங்கள் பழைய பாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமமுக பற்றிப் பேசி குழப்பத்தை உருவாக்கியிருக்கிறார்.
கரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்காக பிரச்சாரம் செய்ய விராலி மலை வந்த அவர் ‘ நான் வரும் வழியில் எனக்கு தெரிந்த சில பெண்களைப் பார்த்தேன். அவர்கள் அமமுக கூட்டத்திற்கு சென்று வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் என்னம்மா நீங்களும் அமமுக கூட்டத்துக்கு செல்கிறீர்களா எனக் கேட்டேன். அவர்கள் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இரண்டு விரல்களை காட்டினார்கள். நான் அவர்களிடம் ‘ அமமுக கூட்டத்துக்கு செல்வது தவறு இல்லை. அதுவும் நம்ம கட்சிதான். ஆனால் எல்லோரும் கண்டிப்பா இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்க எனக் கூறினேன்’ எனப் பேசினார்.